Friday, 27 July 2012

The Shining - திரை விமர்சனம்


The Shining - திரை விமர்சனம்


ஒரு ஹாரர் த்ரில்லர் வகை படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தப்படம். ஒரு ஹாரர் த்ரில்லர் வகை திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம், இரண்டாவது முறை பார்க்கும் போது சஸ்பென்ஸ் உடைந்ததால் போர் அடிக்கத்துவங்கும், ஆனால் இந்தப்படத்தை நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காத, பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் இந்தப்படம். திரைக்கதையில் ஸ்டான்லி க்யுப்ரிக் (Stanley Kubrick) பல முடிச்சுகளை போட்டு இருப்பார், அதை இரண்டாவது முறை பார்க்கும் போது தான், நாம் படம் பார்க்கும் போது பல முடிச்சுகளை தவற விட்டது தெரியும். ஹாரர் த்ரில்லர் வகை படங்களில் இது தான் மாஸ்டர் பீஸ். இந்த வகை படங்களில் இதுபோல ஒரு படம் இதுவரை வந்ததில்லை என நிச்சயமாக கூறலாம்.
ஹாலிவுட்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஸ்டான்லி க்யுப்ரிக்(Stanley Kubrick)இப்படத்தை இயக்கியுள்ளார். இவரை பற்றி சொல்லவேண்டுமானால் இந்த பதிவு போதாது. இவர் எடுத்தது மொத்தம் 13  படங்கள் தான், அதில் The Killing, Full Metal Jacket, Paths of Glory, Spartacus, Dr.Strangelove, 2001: A Space Odyssey, A Clockwork Orange, Barry Lyndon என அத்தனை படங்களும் IMDB Top 250- ல் உள்ளவை. அத்தனையும் ஒவ்வொரு வகையில் மாஸ்டர் பீஸ்கள். இயக்குனர்களில் இவர் ஒரு ஜீனியஸ். இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson) நடிப்புலகின் முடிசூடா மன்னர்களில் ஒருவர். இவரது நடிப்பின் மிகப்பெரிய ரசிகன் நான். நடிகர்களுக்கு ஸ்க்ரீன் பிரசன்ஸ் மிகவும் முக்கியம், அதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. பத்து பேர் இருக்கும் ஒரு காட்சியில் கூட இவர் மட்டும் தனியாக தெரிவார். 12  முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு முறை வென்றவர். 
மனுஷன் இந்தப்படத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். எல்லாருக்கும் Batman  படங்களில் வரும் Joker கேரக்டர் ரொம்ப பிடிக்கும், அதிலும் The  Dark  Knight படத்தில் ஜோக்கராக நடித்த Heath  Leadger - ஐ மிகவும் பிடிக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் Tim  Burton  இயக்கிய Batman  படத்தில் ஜோக்கராக நடித்திருக்கும் ஜாக் நிக்கல்சன் நடிப்புதான் அட்டகாசம்.
 இந்தப்படத்தில் ஜாக் நிக்கல்சன் (Jack Torrence)ஆகவும், Shelley Duvall அவரது மனைவி  Wendy Torrence-ஆகவும், Danny Lloyd  அவர்களது 6 வயது மகன் Danny Torrence-ஆகவும் நடித்துள்ளனர். Stephen King  எழுதிய The Shining-1977 என்ற நாவலை தழுவி தான் இந்தத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
 காலராடோ என்ற ஊரின் மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய ஹோட்டலை பனி பொழியும் நாட்களில் பாதுகாப்பதற்காக தன் மனைவி மற்றும் மகனுடன் செல்கிறான் ஜாக் டோர்ரன்ஸ். பனிக்காலம் என்பதால் பனிப்பொழிவு அந்தப்பகுதியில் மிக அதிகமாக இருக்கும், அந்த சமயத்தில் ஹோட்டல் இயங்காது. அதனால் ஹோட்டலை பராமரிக்கும் பணிக்கு ஜாக் டோர்ரன்ஸ் அமர்த்தப்படுகிறான், அந்த சமயத்தில் அவன் குடும்பம் மட்டும் தான் அங்கு இருக்கும். எழுதுவதில் ஆர்வமுள்ள ஜாக் டோர்ரன்ஸ் இந்த தனிமை தனக்கு எழுதுவதற்கு உபயோகமாக இருக்கும் என்று நினைத்து இந்த வேலையை ஏற்றுக்கொள்கிறான். இந்த பணியில் சேரும் முன்பு அந்த ஹோட்டல் மேனேஜர் சில வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்ததாக ஜாக்கிடம் கூறுகிறான். அங்கு அவனைப்போல ஹோட்டலை பாதுகாப்பதற்கு வரும் ஒருவன் தனிமையின் காரணமாக பித்துப்பிடித்து தன் மனைவி மற்றும் இரு  பெண் குழந்தைகளையும் கொன்று, பின்பு தானும் தற்கொலை செய்து கொள்கிறான் என்று ஜாக்கிடம் சொல்கிறான். ஜாக் இந்த சம்பவத்தை பெரிதுப்படுத்தாமல்  பணியில் சேருகிறான்.
அவர்களது மகனுக்கு ESP (Extrasensory perception ) எனப்படும் சக்தி உண்டு, நடந்த சம்பவங்கள் மற்றும் நடக்கபோகும் சம்பவங்களை முன்கூட்டியே அறியும் மற்றும் பார்க்கும் திறன். இந்த அபூர்வ சக்தியை பற்றி அவனது பெற்றோருக்குக் கூட தெரியாது. அவன் நடக்கப்போகும் சில சம்பவங்களை பற்றி தன் அம்மாவிடம் சொல்லும்போது, அதை அவள் நம்பாமல் அவனுக்கு ஏதோ குறை என்று எண்ணுகிறாள்.
ஹோட்டலுக்கு வரும் ஜாக்கின் குடும்பத்திற்கு ஹோட்டலை சுற்றிக்காட்டுகிறார் அங்கு வேலை செய்யும் சமையல்காரர், அவருக்கும் ESP (Extrasensory perception ) எனப்படும் சக்தி உண்டு. டேனியிடமும் அந்த சக்தி இருப்பதை அறிந்து கொள்கிறார். அந்த ஹோட்டலில் ரூம் 237 -க்கு மட்டும் போக வேண்டாம் மற்றும் அந்த ஹோட்டலில் கெட்ட சக்தி இருக்கிறது  என்று எச்சரித்து விட்டு கிளம்புகிறார்.
 தனது மனைவி மற்றும் மகனுடன்  ஜாக் அங்கு தனியாக வசிக்க துவங்குகிறான் , ஜாக் தனது புத்தகம் எழுதும் வேலையில் மூழ்கிப்போகிறான். அவனது மனைவி சமையல் வேலைகளை கவனித்து வருகிறாள், மகன் டேனி தனியாக விளையாடிக்கொண்டு இருக்கிறான். டேனிக்கு அவனது மூன்று சக்கர வண்டியில் ஹோட்டல் முழுவதும் சுற்றுவது தான் வழக்கம்.  
 அந்த சமயத்தில் அந்த ஹோட்டலில் இறந்து போனதாக சொல்லப்படும் இரு பெண் குழந்தைகளின் உருவம் மற்றும் லிப்ட்-ல் இருந்து ரத்தம் ஆறு போல பாய்ந்து வருவது அடிக்கடி டேனிக்கு மட்டும் தெரிகிறது. அந்த ஹோட்டல் முழுவதும் அவன் மூன்று சக்கர வண்டியில் சுற்றுவதை மிக அழகாக ஒரு அதிர்வு கூட இல்லாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தப்படத்தில் உள்ள மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்று இது.
சில நாட்களுக்கு  பிறகு ஜாக்கால் முன்பு போல எழுத முடியாமல், அமைதி, தூக்கம் இன்றி தவிக்கிறான், மனைவியிடமும் எரிந்து எரிந்து விழுகிறான். அவன் எழுதிகொண்டிருக்கும் போது, தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவளை எச்சரிக்கிறான். ஜாக் திடீர் தீடிரென்று தூக்கத்தில் கத்துகிறான் யாரிடமும் பேசாமல்  மனநிலை பாதிக்கப்பட்டவனை போல் ஆகிறான்.
பனிப்பொழிவு உச்சத்தை அடைகிறது, ஹோட்டலை விட்டு செல்ல முடியாதவாறு மிகக்கடுமையான பனிப்பொழிவு. தொலைதொடர்பு சாதனங்கள் வேலை செய்யாமல், அதனால் வெளி உலகத்துடனான தொடர்பு முற்றிலும் இல்லாமல் போகிறது.
டேனிக்கு
237 -ம் அறைக்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் வலுக்கிறது. அப்போது விளையாடிகொண்டிருக்கும் டேனியை நோக்கி ஒரு பந்து 237 -ம் அறையில் இருந்து வருகிறது. திறந்திருக்கும் அந்த அறையில் தனது அம்மா உள்ளே இருக்கிறாள் என்று நினைத்து உள்ளே செல்கிறான். சமையலைறையில் வேலை செய்துக்கொண்டிருக்கும் ஜாக்கின் மனைவி ஒரு அலறல் சத்தம் கேட்டு ஜாக்கிடம் ஓடி வருகிறாள், அவனிடம் என்னவென்று விசாரிக்கிறாள், அதற்கு ஜாக், மனைவி மற்றும் மகனை கொலைசெய்வதாக கனவு கண்டேன் என்று கூறுகிறான். அந்த சமயத்தில் அங்கு வரும் டேனியின் கழுத்தில் யாரோ அறைந்த காயத்தை ஜாக்கின் மனைவி பார்க்கிறாள்.
 இருவரும் இங்கு இருக்க டேனியை அறைந்தது யார்? என்று யோசிக்காமல் அதை செய்தது ஜாக் தான் என்று சந்தேகம் கொள்கிறாள், அதனால் அவனிடம் கோபித்துகொண்டு அவளது அறைக்கு சென்று விடுகிறாள். அவன் எழுதும் இடத்திற்கு வரும் மனைவி அவன் எழுதியதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். "All work and no play make Jack a dull boy" என்று திரும்ப திரும்ப இதே வரிகளை ஜாக் ஆயிரக்கணக்கான பக்கங்களில் டைப் செய்து வைத்திருக்கிறான். 
எழுதுகிறேன் என்று கூறிவிட்டு, ஒரே ஒரு வரியை மட்டும் திரும்ப திரும்ப ஜாக் டைப் செய்வது ஏன் 
அவன் உண்மையில் மனநிலை பதிக்கப்பட்டுள்ளனா? அல்லது அந்த ஹோட்டலில் உள்ள அமானுஷ்ய சக்திகள் அவனை ஆட்டி படைக்கின்றனவா?
உண்மையில் டேனியை அறைந்தது யார்?
அந்த 237 -ம் அறையில் அப்படி என்னதான் உள்ளதுஇது போன்ற நிறைய புதிர்களுக்கான பதில்களை இந்த முதுகெலும்பை சில்லிட வைக்கும் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
 ஹாரர், த்ரில்லர் வகை படங்கள் எப்பொழுதும் மனிதர்களையோ அல்லது பேய்களை மிகவும் அகோரமாக காட்டி பார்வையாளர்களை பயமுறுத்துவார்கள்.. ஆனால் இந்தப்படத்தில் அப்படி கிடையாது, காட்சி அமைப்பு மற்றும் ஜாக்கின் நடிப்பிலயே பார்வையாளர்களை பயமுறுத்தி விடுவார்கள். இந்தப்படத்தில் ஒளிப்பதிவு அட்டகாசம். ஒவ்வொரு காட்சியும் wallpaper  போல இருக்கும், மிக சிரத்தையாக எடுத்திருப்பார் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்.

இந்தப்படம் ஹாரர் மற்றும் த்ரில்லர் பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து,Wednesday, 25 July 2012

Pulp Fiction - திரைவிமர்சனம்


Pulp Fiction - திரைவிமர்சனம்


Quentin Tarantino இயக்கிய இந்த படத்தில் John Travolta (Vincent Vega ) , Samuel L. Jackson (Jules Winnfield ) , Bruce Willis(Butch Coolidge) , Uma Thurman(Mia Wallace) மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் சிறந்த திரைக்கதைக்காக (Quentin Tarantino )ஆஸ்கார் அவார்ட்ஸ் வென்றது மட்டுமல்ல  சிறந்த நடிகை(Uma Thurman), சிறந்த நடிகர்(John Travolta& Samuel L. Jackson) , சிறந்த இயக்குனர்(Quentin Tarantino), சிறந்த படம், சிறந்த Editing க்காக ஆஸ்கார்-க்கு  பரிந்துரைக்கப்பட்டது. IMDB டாப் 250 இல் 4 வது இடத்தை பிடித்துள்ளது. காரணம் இப்படம் ஒரு cult கிளாசிக் என்று அழைக்கப்படும் புதுமையான படம்.


இயக்குனரை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் முழு நீள இயக்குனராக இயக்கிய திரைப்படங்கள் Reservoir Dogs , Pulp fiction, Kill Bill 1&2, Jackie Brown, Inglorious Bastards. அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.  இந்த படம் அனைவராலும் பாராட்டபட்டதற்கு  முக்கிய  காரணம் இந்த படத்தின் திரைக்கதை என்று சொல்லலாம். படம் முதல் காட்சியில் ஆரம்பித்து  நகர்ந்து கொண்டிருக்கும், நமக்கே தெரியாமல் படத்தின் கடைசி காட்சியை , படத்தின் முதல் காட்சியில் கொண்டு வந்து  முடித்திருப்பார் இயக்குனர். இந்த புதுமையான முயற்சிக்கு தான் இவ்வளவு வரவேற்ப்பு.


திரைக்கதை அமைத்திருக்கும் படியே கதையை பார்ப்போம். நான்கு முக்கிய தடங்களில் கதை நகர்கிறது. ஒன்று இரு திருடர்கள், இரண்டு வின்சென்ட் &ஜூல்ஸ்,முன்று அவர்கள் தலைவனின்  மனைவி Mia மற்றும்  வின்சென்ட், நான்கு குத்துச்சண்டை வீரர் Butch. நேர்கோட்டில் பயணிக்காமல் Non- Linear ஆக இருக்கும் திரைக்கதை. இந்த திரைப்படத்தை பார்க்கும் போது sub-title லோடு பார்ப்பது  சிறந்தது. வசனம் புரிந்தால் படத்தை இன்னும் ரசித்து பார்க்கலாம். ஏனெனில் படத்தில் டயலாக் oriented humor அதிகம்.


முதல் காட்சியில் இரு திருடர்கள் ஒரு ஹோட்டலில் அமர்ந்து  கொள்ளை அடிப்பதை பற்றி பேசிகொண்டிருகிறார்கள். ஹோட்டலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், அவர்களிடம் இருந்து (purse)பர்சை அடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்பதாலும் ஹோட்டலில் கொள்ளை அடிக்க முடிவு செய்து , துப்பாக்கி முனையில் அங்கிருப்பவர்களை மிரட்டுகிறார்கள். இத்தோடு இந்த காட்சி கட்.


இரண்டாவது காட்சியில் வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ், தன் முதலாளியிடம் ( Marsellus) இருந்து திருடப்பட்ட ஒரு பெட்டியை தேடி காரில்  செல்கின்றனர். ஒரு வீட்டிற்க்குள் செல்லும் அவர்கள் அந்த ரூம்-இல் இருக்கும் இரண்டு பேரை சுட்டு தள்ளுகின்றனர். கொலை செய்ய போகிறார்கள் என்று அவர்கள் பேசும் டயலாக் வைத்து யூகிக்கவே முடியாது. இத்தோடு இந்த காட்சி கட்.

 
வெளியுருக்கு செல்வதால் தன் மனையை வெளியே அழைத்து செல்லுமாறு கூறுகிறான் Marsellus. வின்சென்ட்-க்கு போதை பழக்கம் உள்ளதால் Heavy Dose Heroine- வாங்கி அவன் சட்டையில் வைத்து கொண்டு Mia வை சந்திக்க அவள் வீடிற்கு செல்கிறான். Mia-விற்கும் போதை பழக்கம் உள்ளது . Mia-வும் அவனும் வெளியே சென்று விட்டு வீடிற்கு திரும்பும் பொது தவறுதலாக  அவள் வின்சென்ட் சட்டையில் இருந்த Heroine-ஐ பயன்படுத்துகிறாள். அதனால் , மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து  இறக்கும் தருவாயில் உள்ள அவளை வின்சென்ட் எப்படி காப்பாற்றுகிறான்?....


குத்துச்சண்டை வீரரான Butch , நடக்க இருக்கும் மேட்ச்-இல் தோற்க்க ஒப்புக்கொண்டு Marsellus -இடம் பணம் வாங்கி கொள்கிறான். அவனிடன் தன் அப்பாவின் கைக்கடிகாரம்  ஒன்று உள்ளது (அந்த கைக்கடிகாரத்தை நேசிச்பதர்க்கு ஒரு சின்ன Flashback உள்ளது). குத்துச்.சண்டையில்  தோற்பதற்கு பதிலாக எதிராளியை அடித்தே கொன்று விட்டு அங்கிருந்து தப்பித்து தன் காதலிடம் வருகிறான் . இருவரும் மறுநாள் காலை  ஊரை விட்டு தப்பித்து செல்ல இருகின்றனர். அடுத்த நாள் காலையில் அவன் பெட்டியில்  அந்த கைக்கடிகாரத்தை காணவில்லை காரணம் அவன் காதலி கடிகாரத்தை அவன் வீட்டிலே மறந்து வைத்துவிடுகிறாள் . வீட்டிற்கு சென்று கைக்கடிகாரத்தை எடுத்து வந்தவுடன் ஊரை விட்டு செல்லலாம் என்று கூறி வீட்டிற்கு செல்கிறான். எடுத்து கொண்டு வரும் வழியில் Marsellus பார்த்து விடுகிறான். அவனிடம் மாட்டிகொண்டானா ? ஊரை விட்டு தப்பித்து சென்றானா? ...


இப்பொழுது, முதலில் பார்த்த இரண்டாவது காட்சி வருகிறது. வின்சென்ட்-டும், ஜூல்ஸ்-ம், எத்தனை பேரை கொன்று, பெட்டியை எடுத்துவந்தார்கள். அவர்கள் பெட்டியை கொண்டுபோய் தன் முதலாளியிடம் எப்படி சேர்கிறார்கள். வழியில் என்ன நேர்கிறது? எப்படி முதல் காட்சி கடைசி காட்சியில் முடிகிறது என்பது மீதி உள்ள intelligent ஆன திரைக்கதை..


படத்தில் ஜூல்ஸ்-இன் டயலாக்  டெலிவரி அற்புதமாக இருக்கும். கொலை செய்ய உள்ள ஆளிடம் இருந்தே அவன் Burger மற்றும் Sprite ஐ சாப்பிட்டு விட்டு அவனை சுடும் காட்சியில்  மிகவும் கூலாக நடித்திருப்பார். படத்தின் இயக்குனர் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.


வின்சென்ட் போதை பழக்கம் உள்ளவன் என்பதால், ஒரு வித மயக்கத்தில் இருப்பான். Mia-வை காப்பாற்ற அவன் கார் ஒட்டி செல்லும் காட்சி மற்றும் இருவரும் டான்ஸ் ஆடும் கட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கும். அதில் நன்றாக டான்ஸ் ஆடும் ஜோடிக்கு ஒரு Trophy பரிசு என்று அறிவித்திருப்பார்கள். டான்ஸ் ஆடி முடிந்தபின் வீடு திரும்பும் பொது அவர்கள் கையில் Trophy இருக்கும். பிறகு வேறொரு காட்சியில் கைக்கடிகாரத்தை எடுக்க Butch வீட்டிற்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் இருந்து Trophy காணவில்லை என்று ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகும். ஆகவே இருவரும் டான்ஸ் ஆடி Trophy ஐ வெல்லவில்லை ஆனால் திருடிவந்திருப்பார்கள்.


$8,000,000 செலவில் எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம் $213,928,760 வசூல் செய்து லாபம் பெற்றுள்ளது. படம் பாருங்கள். நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.