Friday 15 March 2013

பரதேசி - திரைவிமர்சனம்

பாலாவின் ரசிகர்கள் தாராளமாக காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்..
பாலா எடுத்ததிலயே மிகச்சிறந்த படம் இதுதான். பாலாவிற்கு மற்றும் ஒரு மைல்கல், இந்த பரதேசி. என்னடா உலகத்திரைப்படங்கள் பற்றி எழுதுபவன், தமிழ் பட விமர்சனம் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? இந்த படம் நிச்சயமாக ஒரு உலகத்திரைப்படம் தான். பாலாவிற்கு மற்றுமொரு மணிமகுடம்.
 தமிழ் சினிமாவில் மகேந்திரன் விட்டு போன இடத்தை பாலாவால் மட்டுமே நிரப்ப முடியும். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மூன்று படங்களில் இந்த படம் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு அந்த பாதிப்பு இன்னும் போகவில்லை.கண்டிப்பாக சில வாரங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படத்தை மகா கலைஞன் பாலாவால் மட்டுமே செய்யமுடியும்.
 1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்கும் கதை அங்கு உள்ள மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்  மற்றும் திருமணமுறை போன்றவற்றை சொல்லியவாரே அழகான நதி போல பிரயாணிக்கிறது. தண்டோரா  போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி () ராசா) , வெகுளியான அதர்வாவை காதலிக்கும் வேதிகா(அங்கம்மா). பாலாவின் பாத்திரப்படைப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம், மிகவும் நேர்த்தியானவை. அதர்வாவின் பாட்டி தான்  படத்தில் சந்தானம், பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
 நாஞ்சில் நாடன் எழுதிய இடலாக்குடி ராசா சிறுகதையின் பாதிப்பு என்னை போலவே பாலாவிற்கும் அதிகம் உண்டு என நினைக்கிறேன். கல்லூரி செல்லும் நாட்களில் படித்த சிறுகதை அது, இந்நாள்  வரை அந்த கதை என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
ராசா வண்டிய விட்டுடுவேன்என்ற வரி படிக்கும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் குளமாவதை, கதையை படித்தவர்கள் அறிவார்கள். அதர்வாவின் கதாபாத்திரம் "இடலாக்குடி ராசாவை" பிரதிபலிப்பது போலவே இருக்கும். ராசா வண்டிய விட்டுடுவேன் என்ற அதே வரியை பாலா உபயோகப்படுத்தி இருக்கிறார்.
 ஊரில் வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வாவை ஒரு கங்காணி சந்திக்கிறான். ஊர் மக்களிடம் தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், தோட்டத்தில் தேயிலை பறித்தல், தேயிலை மரங்களை கவாத்து செய்தல்  மற்றும் களை எடுத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்றும் தக்க கூலி கொடுப்பதாகவும் சொல்கின்றான். மனைவி  மற்றும் பிள்ளைகளை உடன் அழைத்து வரலாம் என்றும் அவர்களுக்கும் கூலி கொடுப்பதாகவும் வருடம் ஒரு முறை விடுப்பு கொடுப்பதாகவும் மிக இனிமையாக பேசுகிறான். அவர்களிடம் வெத்து  பேப்பரில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களை தேயிலை  தோட்டத்திற்கு அழைத்து செல்கிறான். ஊரில் உள்ள நிறைய மக்கள் அவனுடன் செல்கின்றனர். 48 நாட்கள் நடை பயணமாக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அந்த தேயிலை தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர்.
 இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம்  அடைகிறாள். அது தெரிந்து அவளை அவளின் தாய் வீட்டை விட்டு அனுப்பி விடுவதால் அதர்வாவின் பாட்டியுடன் வந்துவிடுகிறாள். தேயிலை தோட்டத்தில் தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா . அவளின் கணவன் 2 வயது பெண் குழந்தையுடன் அவளை தோட்டத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடுவதால் தனியாக வசிக்கிறாள்.  தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் ஆங்கிலேய பிரபு அங்கு உள்ள பெண்களை தவறாக நடத்துகிறான்.  கடுமையான வேலை காரணமாக நிறைய பேருக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. அதர்வாவிற்கு தன்  பாட்டியிடம்  இருந்து அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி கடிதம் மூலமாக தெரிய வருகிறது.
விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைத்து அவர்கள் சம்பள பணத்தை  பிடித்துக்கொண்டு மீண்டும் சில வருடங்கள் வேலை செய்ய சொல்லி ஏமாற்றுகிறான் அந்த கங்காணி. அங்கம்மாவை பார்க்க  துடிக்கும் ராசா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது  அடியாட்களிடம் மாட்டி கொள்கிறான். அதனால் அவன் மறுபடியும் தப்பி ஓடாதபடிக்கு அவனின் கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். அங்கம்மாவிற்கு ஒரு ஆண்  குழந்தை  பிறக்கிறது, சரியான மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் விஷ காய்ச்சல் வந்து  நிறைய மக்கள் இறக்க நேரிடுகிறது. அந்த  காய்ச்சலில் மரகதமும் இறக்க நேரிடுகிறது. அந்த மக்களை விடுவித்தார்களா? ராசா தன்  மகனையும் மனைவியையும் சந்தித்தானா? முடிவை திரையில் கண்டு ரசியுங்கள் , ஆனால்  ப்படி ஒரு முடிவை பாலாவினால் மட்டும் தான் யோசிக்க முடியும் !!!
 படம் நெடுகிலும் சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ், இப்படி படம் முழுவதும் பட்டாசு கிளப்பியிருக்கிறார் பாலா. இவர் தான் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.

நியாயமாரேஎன்று அதர்வா தேயிலை தோட்டத்து கங்காணியிடம் கதறும் காட்சி, அய்யோ நம் நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்  பாலா, அவரால்  மட்டுமே இப்படி ஒரு காட்சியை வைக்கமுடியும். 
இந்த படத்தை பார்த்த பிறகு நாம் டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலை தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றும் கஷ்டங்கள் நமது கண் முன் ஒருமுறை வந்து போவது உறுதி.
இனிமேல் என்னால் டீயே குடிக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.
ஆங்கிலேயர் நமது இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், தேயிலை தோட்டத்து அடிமை தொழிலாளர்கள்  அனுபவித்த கொடுமைகளுக்கு ஆங்கிலயேர்கள் மட்டும் காரணமில்லை, காட்டி மற்றும் கூட்டி கொடுத்த வேலையை செய்ததது நமது இன மக்களும் தான் என  கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் பாலா. இது ஒரு உண்மையான கலைஞனிடம்  வந்து இருக்கும் உண்மையான திரைப்படம்.
 அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு, என்ன சொல்றது? அவர்கள்  கதாப்பத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள், பிரமாதம்.
தேசிய விருது குழுவினர் அனைத்து விருதகளையும்  இந்த வருடத்திற்கு இப்போதே எடுத்து வைத்துக்கொள்ளலாம், பரதேசி படக்குழுவினருக்காக.