Friday, 15 March 2013

பரதேசி - திரைவிமர்சனம்

பாலாவின் ரசிகர்கள் தாராளமாக காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்..
பாலா எடுத்ததிலயே மிகச்சிறந்த படம் இதுதான். பாலாவிற்கு மற்றும் ஒரு மைல்கல், இந்த பரதேசி. என்னடா உலகத்திரைப்படங்கள் பற்றி எழுதுபவன், தமிழ் பட விமர்சனம் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? இந்த படம் நிச்சயமாக ஒரு உலகத்திரைப்படம் தான். பாலாவிற்கு மற்றுமொரு மணிமகுடம்.
 தமிழ் சினிமாவில் மகேந்திரன் விட்டு போன இடத்தை பாலாவால் மட்டுமே நிரப்ப முடியும். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மூன்று படங்களில் இந்த படம் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு அந்த பாதிப்பு இன்னும் போகவில்லை.கண்டிப்பாக சில வாரங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படத்தை மகா கலைஞன் பாலாவால் மட்டுமே செய்யமுடியும்.
 1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்கும் கதை அங்கு உள்ள மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்  மற்றும் திருமணமுறை போன்றவற்றை சொல்லியவாரே அழகான நதி போல பிரயாணிக்கிறது. தண்டோரா  போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி () ராசா) , வெகுளியான அதர்வாவை காதலிக்கும் வேதிகா(அங்கம்மா). பாலாவின் பாத்திரப்படைப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம், மிகவும் நேர்த்தியானவை. அதர்வாவின் பாட்டி தான்  படத்தில் சந்தானம், பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.
 நாஞ்சில் நாடன் எழுதிய இடலாக்குடி ராசா சிறுகதையின் பாதிப்பு என்னை போலவே பாலாவிற்கும் அதிகம் உண்டு என நினைக்கிறேன். கல்லூரி செல்லும் நாட்களில் படித்த சிறுகதை அது, இந்நாள்  வரை அந்த கதை என் நெஞ்சை விட்டு அகலவில்லை.
ராசா வண்டிய விட்டுடுவேன்என்ற வரி படிக்கும் போது நம்மை அறியாமல் நம் கண்கள் குளமாவதை, கதையை படித்தவர்கள் அறிவார்கள். அதர்வாவின் கதாபாத்திரம் "இடலாக்குடி ராசாவை" பிரதிபலிப்பது போலவே இருக்கும். ராசா வண்டிய விட்டுடுவேன் என்ற அதே வரியை பாலா உபயோகப்படுத்தி இருக்கிறார்.
 ஊரில் வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வாவை ஒரு கங்காணி சந்திக்கிறான். ஊர் மக்களிடம் தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், தோட்டத்தில் தேயிலை பறித்தல், தேயிலை மரங்களை கவாத்து செய்தல்  மற்றும் களை எடுத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்றும் தக்க கூலி கொடுப்பதாகவும் சொல்கின்றான். மனைவி  மற்றும் பிள்ளைகளை உடன் அழைத்து வரலாம் என்றும் அவர்களுக்கும் கூலி கொடுப்பதாகவும் வருடம் ஒரு முறை விடுப்பு கொடுப்பதாகவும் மிக இனிமையாக பேசுகிறான். அவர்களிடம் வெத்து  பேப்பரில் கைநாட்டு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களை தேயிலை  தோட்டத்திற்கு அழைத்து செல்கிறான். ஊரில் உள்ள நிறைய மக்கள் அவனுடன் செல்கின்றனர். 48 நாட்கள் நடை பயணமாக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக அந்த தேயிலை தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர்.
 இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம்  அடைகிறாள். அது தெரிந்து அவளை அவளின் தாய் வீட்டை விட்டு அனுப்பி விடுவதால் அதர்வாவின் பாட்டியுடன் வந்துவிடுகிறாள். தேயிலை தோட்டத்தில் தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா . அவளின் கணவன் 2 வயது பெண் குழந்தையுடன் அவளை தோட்டத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிடுவதால் தனியாக வசிக்கிறாள்.  தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் ஆங்கிலேய பிரபு அங்கு உள்ள பெண்களை தவறாக நடத்துகிறான்.  கடுமையான வேலை காரணமாக நிறைய பேருக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. அதர்வாவிற்கு தன்  பாட்டியிடம்  இருந்து அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி கடிதம் மூலமாக தெரிய வருகிறது.
விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைத்து அவர்கள் சம்பள பணத்தை  பிடித்துக்கொண்டு மீண்டும் சில வருடங்கள் வேலை செய்ய சொல்லி ஏமாற்றுகிறான் அந்த கங்காணி. அங்கம்மாவை பார்க்க  துடிக்கும் ராசா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது  அடியாட்களிடம் மாட்டி கொள்கிறான். அதனால் அவன் மறுபடியும் தப்பி ஓடாதபடிக்கு அவனின் கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். அங்கம்மாவிற்கு ஒரு ஆண்  குழந்தை  பிறக்கிறது, சரியான மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் இல்லாத காரணத்தால் விஷ காய்ச்சல் வந்து  நிறைய மக்கள் இறக்க நேரிடுகிறது. அந்த  காய்ச்சலில் மரகதமும் இறக்க நேரிடுகிறது. அந்த மக்களை விடுவித்தார்களா? ராசா தன்  மகனையும் மனைவியையும் சந்தித்தானா? முடிவை திரையில் கண்டு ரசியுங்கள் , ஆனால்  ப்படி ஒரு முடிவை பாலாவினால் மட்டும் தான் யோசிக்க முடியும் !!!
 படம் நெடுகிலும் சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ், இப்படி படம் முழுவதும் பட்டாசு கிளப்பியிருக்கிறார் பாலா. இவர் தான் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர் என்று மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.

நியாயமாரேஎன்று அதர்வா தேயிலை தோட்டத்து கங்காணியிடம் கதறும் காட்சி, அய்யோ நம் நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்  பாலா, அவரால்  மட்டுமே இப்படி ஒரு காட்சியை வைக்கமுடியும். 
இந்த படத்தை பார்த்த பிறகு நாம் டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலை தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றும் கஷ்டங்கள் நமது கண் முன் ஒருமுறை வந்து போவது உறுதி.
இனிமேல் என்னால் டீயே குடிக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.
ஆங்கிலேயர் நமது இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், தேயிலை தோட்டத்து அடிமை தொழிலாளர்கள்  அனுபவித்த கொடுமைகளுக்கு ஆங்கிலயேர்கள் மட்டும் காரணமில்லை, காட்டி மற்றும் கூட்டி கொடுத்த வேலையை செய்ததது நமது இன மக்களும் தான் என  கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் பாலா. இது ஒரு உண்மையான கலைஞனிடம்  வந்து இருக்கும் உண்மையான திரைப்படம்.
 அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு, என்ன சொல்றது? அவர்கள்  கதாப்பத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள், பிரமாதம்.
தேசிய விருது குழுவினர் அனைத்து விருதகளையும்  இந்த வருடத்திற்கு இப்போதே எடுத்து வைத்துக்கொள்ளலாம், பரதேசி படக்குழுவினருக்காக. 

Saturday, 24 November 2012

Shutter Island - திரை விமர்சனம்


மிஸ்டரி த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படத்தை  Martin Scorsese இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில்  Leonardo DiCaprio ( Teddy Daniels)  , Mark Ruffalo (Chuck Aule) , Ben Kingsley (Dr. Cawley) மற்றும் பலர் நடித்துள்ளனர். Martin Scorsese படம் என்றாலே ஒரு ஏதிர்பார்ப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் ஒரு வெற்றி படத்தை மிக அற்புதமாக இயக்கிய அவருக்கு ஒரு சலாம் போடலாம். IMDB டாப் 250 யில் 234 வது இடத்தையும் ஏராளமான  விருதுகளையும் அள்ளியுள்ளது இந்த படம்.

நம்ம டைரக்டர் Martin Scorsese இந்த படத்திற்காக ஆஸ்கார்( Best Achievement in direction) வென்றுள்ளார். அதுமட்டுமல்ல 10 முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர்   இயக்கிய  சில  முக்கிய  திரைப்படங்கள் Taxi Driver, Good Fellas , The Departed , Hugo , The Gangs of New York  etc. அவர் இயக்கிய The Last Temptation of Christ என்ற திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இவருக்கு ஆஸ்கார் கிடைக்காமல் போனதிற்கு அந்த திரைப்படம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் அந்த திரைப்படத்திற்காக(The Last Temptation of Christ)  சிறந்த இயக்குனர் பிரிவில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்து நம்ம டைட்டானிக் ஹீரோ பத்தி பாக்கலாம். சிறு சிறு வேடங்களில் நடித்து துணை நடிகராக வளர்ந்து  இப்பொழுது ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் அதிக சம்பளம் வாங்கும்  விரல் விட்டு என்ன கூடிய ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஒரு படத்திற்கு சுமார் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரது புகழ் பெற்ற சில திரைப்படங்கள் Titanic, Gangs of New York , Blood diamond, Inception , Catch Me If You Can etc. 3 முறை ஆஸ்காருக்கு பரிந்த்துரைக்கபட்டுள்ளார்.
Ben Kingsley, Gandhi திரைப்படத்தில் காந்தியாக நடித்து ஆஸ்கார் வென்றவர். அதுமட்டுமின்றி 4 முறை ஆஸ்காருக்கு பரிந்த்துரைக்கபட்டவர். அவர் நடித்த சில முக்கிய திரைப்படங்கள் Schindler’s List , Hugo etc. The Avengers படத்தை அனைவரும் பார்த்திருப்பீங்க. அதில Hulk ரோலில் நடித்திருப்பவர் தான் Mark Ruffalo. முன்னுரை முடிஞ்சாச்சு. இப்போ திரைப்படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.

Martin Scorsese , ஹாலிவூடில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இந்த திரைப்படம் அதற்கு ஒரு சான்று. ஒரு மெல்லிய கதைக்கு இப்படியும் திரைக்கதை பண்ண முடியுமா? ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு புத்திசாலித்தனம். திரைக்கதைக்கு  ஏற்ற லொகேஷன் , கதாபாத்திர தேர்வு , ஒளிப்பதிவு, பின்னணி இசை இப்படி அனைத்துமே அருமையாக அமைந்திருக்கிறது இந்த திரைபடத்தில். கதைக்கு வருவோம். 1950 களில் நடக்கும் கதை. ஷட்டர் ஐலேன்ட் என்பது ஒரு தீவு, அதில் சமுதாயத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் மனநிலம் பாதிக்கப்பட்ட கைதிகள் இருக்கும் மருத்துவமனை சிறைசாலை உள்ளது. இதில் வார்டு A, B & C என்று 3 கட்டிடங்கள் உள்ளது. இந்த தீவிற்கு படகுகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும். வேறு வழி கிடையாது.

 அமெரிக்க மார்ஷல்ஸ் ஆன டெடி( Teddy) மற்றும் அவன் நண்பன் சக்(Chuck)கும் ஒரு விசாரணைக்காக செல்கின்றனர். காரணம் ரேச்சல்(Rachel) என்ற ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட கைதி காணாமல் போகிறாள். அவள் தன் பிள்ளைகளை ஏரியில் தள்ளி கொன்று விடுகிறாள். அவளை தேடி கண்டுபிடிக்க இந்த இருவரும் அங்கு செல்கின்றனர். மிகுந்த பாதுகாப்பாக உள்ள இடம்.  விசாரணையில் அங்கு வேலை செய்யும் நர்ஸ் மற்றும் டாக்டர்கள் தக்க ஒத்துழைப்பு அளிக்க மறுகின்றனர். அங்கு உள்ள வார்டு A, B அண்ட் C  யில் தேடி பார்க்க அனுமதி கேட்கிறான், ஆனால் அவர்கள் வார்டு C க்கு செல்ல அனுமதி இல்லை என்றும் ஏற்கனவே  லைட் ஹவுஸ்-ஐ தேடிவிட்டதாகவும் சொல்கின்றனர். சரியான  ஒத்துழைப்பு  இல்லாததால்  திரும்பி செல்ல முடிவு செய்கிறான் டெடி.  இதற்கு இடையில் அவனுக்கு அடிக்கடி ஒற்றை தலைவலி வருகிறது. அப்படி வரும் சமயங்களில் இறந்து போன அவன் மனைவி அவன் கனவில் தோன்றுகிறாள் காணாமல் போன ரேச்சல் கிடைத்து விட்டதாகவும் கேஸ் முடிந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் டெடி-க்கு அவள் உண்மையான ரேச்சல் இல்லை என்று சந்தேகம் எழுகிறது. பலத்த புயல் காரணமாக அங்கு தங்கும்படி நேர்கிறது.

டெடி , சக் இடம்  தன் மனைவி வீட்டில் இருக்கும் பொது, ஒருவன் வேண்டும் என்றே வீட்டுக்கு தீ வைத்ததால் அவள் இறந்து விட்டதாகவும், கனவில் அவள் தோன்றி ,அவன் இங்கு இருப்பதாக சொல்கிறான். பலத்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கபட்டு வார்டு c திறந்துகொள்கிறது. யாருக்கும் தெரியாமல் அவன் தன் மனைவியை கொலை செய்தவனை பார்க்க செல்கிறான். அங்கு ஏதிர்பார்காமல் தன் நண்பனை சந்திக்கிறான். அவன் அனைவரும் இங்குள்ள கைதிகள் மேல் சில மருத்துவ பரிசோதனைக்காக பயன்படுத்துகிறார்கள்  என்றும், பின்னர் அவர்களை அங்குள்ள லைட் ஹவுஸ்க்கு கொண்டு சென்று அவர்கள் தலையில் அறுவை சிகிச்சை (lobotomy) செய்கிறார்கள் என்றும் கூறுகிறான். அவனை இந்த இடத்தை விட்டு செல்ல விடமாடார்கள் என்றும் அவன் நண்பனையும் கூட நம்ப வேண்டாம் என்றும் சொல்கிறான்.

பின்னர் அந்த லைட் ஹவுஸ்க்கு ரகசியமாக சக்-குடன்  என்ன உள்ளது என்று பார்க்க செல்கிறான். வழியில் தன் நண்பன் சொன்னது  நினைவில் வர, சந்தேகப்பட்டு, சக்- கை அங்கேயே இருக்குபடி கூறி விட்டு தனியாக செல்கிறான். இருட்டி விட ஆரம்பிப்பதாலும் பாறைகள் அதிகமாக உள்ளதாலும், திரும்பி வருகிறான். ஆனால் வந்து பார்க்கும் போது அவன் நண்பன் காணமல் போகிறான் . அவனை தேடும் போது, ஒரு குகையில் உண்மையான ரேச்சல்-லை சந்திக்கிறான். அவள் தான் ஒரு டாக்டர் என்றும், இந்த பரிசோதனைகளை நிறுத்த சொன்னதிற்காக அவளை வீண் மீது பழி சுமத்தி அடைத்து வைத்திருப்பதாகவும் அவளுக்கு கல்யாணம் ஆகவில்லை, குழந்தைகளும் இல்லை என்றும் கூறுகிறாள். மேலும் அவனை இந்த தீவை விட்டு வெளியே செல்ல விடமாடார்கள் என்றும் ஏப்படியாவது தப்பித்து செல்ல கூறுகிறாள்.
திரும்பி வரும் அவன், டாக்டரிடம்  தன் நண்பன் காணாமல் போனதை பற்றி கூறுகிறான். ஆனால் அவரோ இங்கு வரும் போது டெடி தனியாக தான் வந்ததாகவும் அவனுடன் யாரும் வரவில்லை என்று கூறுகின்றனர்.  இதற்கிடையில் அவனுக்கு ஒற்றை தலைவலி வந்து அவன் மனைவி கனவில் வந்து அவனுக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கிறாள். அந்த இடத்தை விட்டு தப்பி செல்லும் படியும் கூறுகிறாள். ஆனால் அவன் நண்பன் காணவில்லை என்பதால், அவனை தேடி லைட் ஹவுஸ்க்கு செல்கிறான். அவன் நண்பன் கிடைத்தானா? அவன் மனைவியை தீ வைத்து கொன்றவனை பழி வாங்கினானா? உண்மையில் அங்கு என்ன தான் நடக்கிறது? அந்த இடத்தை விட்டு டெடி தப்பித்தானா? இப்படி எண்ணற்ற பல கேள்விகளுக்கு விடை அளித்ததோடு மட்டும் அல்லாமல் ஒரு ஏதிர்பாராத திருப்புமுனையோடு முடிகிறது திரைப்படம்.

டெடிக்கு வரும் ஒற்றை தலைவலியின் போது அவனுக்கு தோன்றும் காட்சிகளை மிக அழகாக எடுத்திருப்பார்கள்  அவனுக்கு இறந்து போன அவனின் மனைவி கனவில் தோன்றும் போது அவளை கட்டி பிடிக்கும் போது, அவள் ஒரு paper போல எறிந்து சாம்பல் ஆகிவிடுவாள். அதுமட்டுமின்றி அவன் கனவில் சில போர் காட்சிகளும் தோன்றும். ஒரு காட்சியில் ரேச்சல் மற்றும் ஒரு சிறு பெண் தோன்றுவாள். அனைத்தும் கருப்பு வெள்ளையாக இருக்கும், ஆனால் ரேச்சல் மற்றும் அந்த சிறுமி மட்டும் சிவப்பு நிறத்தில் தோன்றுவார்கள். அவர்களை சுற்றி பணிகட்டியில் உறைந்து போன பிணங்கள்.,தன்னை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்கும்  அந்த சிறுமி, இப்படி அவன் கனவு காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். கனவு காட்சிகளுக்கும் நிஜமான காட்சிகளுக்கும் ஒரு வித்தியாசத்தை நம்மால் உணர முடியும்.

படத்தின் ஒரு மிக பெரிய பிளஸ் , படத்தின் ஒளிப்பதிவு. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் Robert Richardson .7 முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு 3 முறை விருதுகளையும் வென்றுள்ளார். அட்டகாசமான ஒளிப்பதிவு. நம்மால் எது  நிஜம் எது கனவு என்று பிரித்து பார்க்க முடியும். படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை அபாரமான ஒளிப்பதிவு.
படம் பார்க்கும்  இரண்டு மணி நிறம் போவதே தெரியாது. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பின்னணி இசை நம்மை ஷட்டர் ஐலேன்ட்-க்கே அழைத்து சென்று விடும். கண்டிப்பாக ஒரு நல்ல த்ரில்லர் படம். நிறைய திருப்பங்களோடு மிக சுவாரசியமான இந்த திரைப்படத்தை மிஸ் பண்ணாம கண்டிப்பா பாருங்க.