Tuesday 28 August 2012

One Flew Over the Cuckoo's Nest – திரைவிமர்சனம்


One Flew Over the Cuckoo's Nest - நல்ல தரமான படங்களை பார்த்து ரசிக்கும் ஒவ்வொருவரின் டாப் டென் லிஸ்ட்-ல் இந்த திரைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றே தீரும். ஆஸ்கரின் கிரான்ட் ஸ்லாம்(Grand Slam) விருதுகள் என்று அழைக்கப்படும் (சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த கதாசிரியர்) என ஆஸ்கர் விருதுகளை வென்றது. இதற்கு முன் இப்படி வென்ற படம் (It  Happened One  Night  - 1934 ) பிறகு (The Silence of the Lambs -1991 )-ல் வென்றது.


1962 -ல் Ken Kesey என்பவர் எழுதிய One Flew Over the Cuckoo's Nest என்ற நாவலை தழுவி தான் இந்தப்படம் எடுக்கப்பட்டது. மிலோஸ் போர்மன்(Milos Forman) இயக்கத்தில், ஜாக் நிக்கல்சன்  (Jack Nicholson) மெக் மர்பி(Mc Murphy)-ஆகவும், Louis Fletcher நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட்(Mildred Ratched)-ஆகவும், Will Sampson சீப் ப்ரோம்டேன் (Chief Bromden) –ஆகவும், Brad Douri பில்லி பாப்பிட் (Billy Babbit)–ஆகவும் நடித்துள்ளனர்.

Jack Nicholson - இந்தப்படத்தில் இவரது நடிப்பை பற்றி என்ன சொல்வது? தனது அட்டகாசமான நடிப்பால் தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றார், இப்படத்தில் மெக் மர்பியாகவே வாழ்ந்து இருப்பார். கோபம், வீரம், எள்ளி நகையாடுதல் போன்று நடிப்பில் உள்ள அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தி இருப்பார். இவரைப்போன்ற ஒரு நடிகன் மிக அரிதாகத்தான் தோன்றுவான்.


சிறிய அளவிலான குற்றங்களை செய்ததற்காக கைது செய்யப்படும் மெக் மர்பி, சிறைச்சாலையில் தனக்கு வழங்கப்படும் கடுமையான வேலைகளுக்கு பயந்து மன நலம் பாதிக்கப்பட்டவன் போல நடிக்கிறான். அவனது நடிப்பு சேட்டைகளை பார்த்து சிறைச்சாலை அதிகாரிகள் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருப்பானோ? என்று நினைக்கிறார்கள். அவன் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவனா? என்பதை கண்டறிய (Oregon)ஒரேகான்-ல் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்கு 90 நாட்கள் ஆய்விற்கு அனுப்புகின்றார்கள். மனநல மருத்துவமனைக்கு வரும் மெக் மர்பி தனக்கு வழங்கப்பட்ட 90 நாட்கள் சிறைத்தண்டனையை, சிறைச்சாலைக்கு சென்றால் கடுமையான வேலைகள் வழங்குவார்கள், அதனால் மனநல மருத்துவமனையிலயே ஜாலியாக கழித்துவிடலாம்  என்று எண்ணி அங்கு வருகிறான். அங்கு நடக்கும் சம்பவங்கள் தான் படம்.


ஜாலியாக பொழுதைக்கழிக்கலாம் என்று மனநல மருத்துவுமனைக்கு வரும் மெக் மர்பிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துகொண்டு இருக்கிறது. நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட் தான் மெக் மர்பி சிகிச்சைக்காக தங்கி இருக்கும் வார்டின் பொறுப்பாளர். அவள் வைத்தது தான் அங்கு சட்டம். அவளிடம் கருணை நானோ(Nano)அளவிற்கு கூட கிடையாது. 18 நபர்கள் தங்கி இருக்கும் அந்த வார்டில் சிலர், சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சிலர் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள், இவர்கள் அனைவரும் நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட் சொல்வதை அப்படியே பயந்து போய் செய்பவர்கள், ஆனால் மெக் மர்பி நர்ஸ் சொல்வதற்கு அப்படியே நேர் எதிராக செய்கிறான். இதனால் நர்ஸ்க்கு அவனை பிடிக்காமல் போகின்றது.

நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட் அந்த வார்டில் உள்ள அனைவரையும் சிகிச்சை என்ற பெயரில் பயமுறுத்தி, வெளியுலக தொடர்பு இல்லாமல் அவர்களை வார்டுக்கு உள்ளயே வைத்து இருக்கிறாள். யாரும் அவளுக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட பேசமாட்டார்கள், மீறினால் ஷாக் ட்ரீட்மென்ட் அல்லது மயக்கத்திலயே வைத்திருக்கும் மாத்திரைகள் கொடுத்துவிடுவாள். அப்படி ஒரு டெர்ரர் கேரக்ட்டர் தான் நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட்.


திக்கு வாய் உள்ள பில்லி பாப்பிட், 65வயதை தாண்டினாலும் குழந்தைப்போல் அடம்பிடிக்கும் சார்லி செஸ்விக், வாய் பேசாத மற்றும் காது கேளாதவன் என்று சொல்லப்படும் 7அடி உயரமுள்ள சீப் ப்ரோம்டன் போன்றவர்களுடன் நட்பாகிறான் மெக் மர்பி. சில நாட்களில் ப்ரோம்டனும் மெக் மர்பியும் நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள். தனியாகவே இருக்கும் ப்ரோம்டனுக்கு மெக் மர்பியை மிகவும் பிடித்துப்போகிறது. அந்த வார்டில் உள்ளவர்களுடன் சீட்டு விளையாடி, தான் வென்றால் தோற்றவர்களின் சிகரட்டுகளை எடுத்துக்கொள்வான் மெக் மர்பி இது தான் அவனது பொழுதுப்போக்கு.

   
கொஞ்சம் கொஞ்சமாக வார்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறான் மெக் மர்பி, அவர்களை தனது பேச்சு, சேஷ்டைகள் மூலம் சந்தோஷப்படுத்துகிறான். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று அடிக்கடி சொல்லி அவர்களை சிந்திக்க விடாமல் செய்கிறாள் நர்ஸ் ரேட்சட். அப்படி இல்லை நீங்களும் சாலையில் நடமாடும் சக மனிதர்களை போல் ஒருவர் தான் என்று அவர்களிடம் சொல்லி உற்சாகப் படுத்துகிறான் மெக் மர்பி.


ஒரு நாள் மருத்துவமனைக்கு சொந்தமான பேருந்தில் வார்டில் உள்ளவர்களை ஏற்றிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் மீன் பிடிக்கச்செல்கிறான், உடன் உள்ளவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல அஞ்சுகிறார்கள், நீங்கள் மன நோயாளிகள் இல்லை மீனவர்கள் என்று அவர்களிடம் சொல்லி உற்சாகப்படுத்தி மீன் பிடிக்க வைக்கிறான் மெக் மர்பி. அவர்களும் நிறைய மீன்களை  பிடிக்கிறார்கள். இதனால் மனநல காப்பகத்தில் உள்ள மருத்துவர்களால் கடுமையாக கண்டிக்கப்படுகிறான், எப்பொழுதும் போல அதைப்பற்றி கவலைப்படவில்லை  மெக் மர்பி.


உணவு அருந்தும் நேரம் மற்றும் தூங்கும் நேரத்தை தவிர வார்டில் உள்ளவர்கள், மற்ற நேரத்தில் என்ன செய்யவேண்டும்? என ஒரு அட்டவணை வைத்திருப்பாள் நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட், அதில் ஒன்று, ஒவ்வொரு நாளும் வார்டில் உள்ள அனைவரையும் ஒன்றாகக்கூட்டி அவர்களிடம் பேசுவாள். அவர்களது கருத்துகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாள், யாரவது மாற்றுக்கருத்து சொன்னால் தனது கோபத்தையும், திமிரையும் முகத்தில் சிறு துளி கூடக் காட்டாமல், இவை அனைத்தையும் தன் குரல் மூலமாகவே வெளிப்படுத்தி, தனது கருத்துக்களை அவர்களிடம் திணித்து விடுவாள். மற்றவர்களை சுதந்திரமாக பேசவிடவே மாட்டாள். இது போன்ற மனரீதியான அடக்குமுறையால் மனநோயாளிகள் ஒருபோதும் குணமடைய மாட்டார்கள் என்று நினைக்கிறான் மெக் மர்பி.

   
இது போல ஒரு நாள் நர்ஸ் அனைவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, சார்லி செஸ்விக் தனக்கு சிகரட் வேண்டும் என கேட்கிறார், ஏனென்றால் நர்ஸ் ரேட்சட் அனைவரின் சிகரட்டுகளையும் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு, ஒரு நாளைக்கு சில சிகரட்டுகளை மாத்திரம் தருவாள். இதனால் சார்லி செச்விக்குக்கு சிகரட் தர மறுக்கிறாள், கோபமடையும் செஸ்விக் சிறு குழந்தையை போல அடம் பிடிக்கிறார், இதைக்கண்ட மெக் மர்பி நர்ஸ் ரேட்சட்-ன் அறையை உடைத்து சிகரட்டை எடுத்து வந்து தருகிறான், தடுக்க வந்த காவலர்களுடன் சண்டை போடுகிறான், அவனுக்கு துணையாக சீப் ப்ரோம்டன் வந்து சண்டை இடுகிறான். இருந்தும் காவலர்கள் அவர்கள் இருவரையும் பிடித்துக்கட்டி விடுகிறார்கள்.

  
அவர்கள் இருவரையும் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அறைக்கு அழைத்து செல்லுமாறு காவலர்களுக்கு கட்டளை இடுகிறாள் நர்ஸ் ரேட்சட். அறைக்கு வெளியே இருக்கும் போது சீப் ப்ரோம்டேனுக்கு சூவிங் கம் ஒன்றை கொடுக்கிறான் மெக் மர்பி, அதற்கு "நன்றி என கூறுகிறான் சீப் ப்ரோம்டன், அப்போது தான் அவனுக்கு பேசத்தெரியும் என்று தெரிகிறது. இருவரும் சிரித்துக்கொண்டே ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அறைக்கு செல்கிறார்கள். ஷாக் ட்ரீட்மென்ட் முடிந்து இருவரும் வார்டுக்கு திரும்புகிறார்கள் இருவரும். 90 நாட்களுக்கு பிறகு கூட தன்னை விடுதலை செய்ய மாட்டார்கள், எதாவது சொல்லி தன்னை இங்கயே வைத்து விடுவார்கள் என்று நினைத்து, அங்கிருந்து தப்பி செல்ல திட்டம் தீட்டுகிறான் உடன் வருமாறு ப்ரோம்டேனையும் அழைக்கிறான் மெக் மர்பி.

  
மனநல மருத்துவமனயில் இருந்து மெக் மர்பி தப்பிச்சென்றானா? உடன் சீப் ப்ரோம்டன் வந்தானா? இல்லை நர்ஸ் ரேட்சட்-ன் மனிதாபிமானம் அற்ற அதிகாரத்தை அங்கேயே இருந்து அடக்கினானா? நர்ஸ் ரேட்சட் என்ன ஆனாள்? மனநோயாளிகளுக்கு என்ன நேர்ந்தது? என்பதை மனதை விட்டு நீங்காத இந்தப்படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

“Cinema should make you forget you are sitting in a theatre” இதை சொன்னது புகழ் பெற்ற இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி, இவரது கருத்துக்கு இந்தப்படம் மிகச்சரியான சான்று. நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல், நாமும் அந்த மனநிலை மருத்துவமனையில் இருப்பது போல உணர்வு வந்துவிடும். அந்த கதாப்பாத்திரங்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்க தொடங்கி விடுவோம். அதனால் தான் இந்தப்படம் காலத்தால் அழியாமல் இன்றும் இருக்கிறது.

  
இந்தப்படம் நமது சமூகத்தை, மனநிலை மருத்துவமனையாக உருவகப்படுத்துகிறது. அந்த சமூகத்தில் வாழும் நாம் அதிகாரம் உள்ளவர்களால் அடக்கப்பட்டு அடங்கி போகும், மனநோயாளிகளை உருவகப்படுத்துகிறது. மெக் மர்பி போன்ற போராளிகள் அதிகார அடக்குமுறைக்கு எதிராக போரிட்டு மறையும் போது தனி மனித சுதந்திரம் எனும் மலரின் சில இதழ்களை இழக்கிறோம் அல்லவா?. இது போல் குறியீடுகளால் நிறைந்துள்ளது இந்தப்படம்.

இந்தப்படத்தின் இசை மிக மிக அற்புதம். அதுவும் கடைசி 10 நிமிடங்கள் வரும் பின்னணி இசை அப்பப்பா
... நம் மனதை எதோ செய்து விடும். கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு மிக அருமை. நர்ஸ் ரேட்சட் ஆக நடித்த லூயிஸ் பிளட்சர் நடிப்பு அபாரம்.


இந்தப்படத்தில் இருந்து நிறைய சீன்களை நமது தமிழ் இயக்குனர்கள் சுட்டு இருப்பார்கள்.
மௌன ராகம்படத்தில் கார்த்திக் போலீசில் அடிப்பட்டு சிரித்துகொண்டே வரும் காட்சி இதில் இருந்து சுட்டது தான்.
நம்ம இயக்குனர்கள் சீன் மட்டுமா சுடுவாங்க?
பிரபு நடித்த மனசுக்குள் மத்தாப்பு இந்தப்படத்தை சுட்டு எடுத்தது தான்.
ஸ்வீடனில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப்படம் 1976-1987 வரை தொடர்ந்து 11வருடங்கள் ஓடியது.

மிஸ் பண்ணாம பாருங்க
, உங்கள் மனதில் நீங்காத இடம் பெரும் இத்திரைப்படம்.

Friday 24 August 2012

A Beautiful Mind - திரைவிமர்சனம்

[A Beautiful Mind - திரைவிமர்சனம் ]


Sylvia Nasar எழுதிய “A Beautiful Mind” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த  திரைப்படம், ஜான் நாஷ் என்ற பிரபலமான  நோபல் பரிசு பெற்ற கணித  மேதையின் வாழ்க்கை பற்றிய  உண்மை கதை. Ron Howard இயக்கிய இத்திரைப்படத்தில் Russell Crowe(John Nash) , Jennifer Connelly(Alicia Nash), Ed Harris (Parcher), Christopher Plummer(Dr. Rosen) மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 8 ஆஸ்கார் அவார்ட்ஸ்-க்கு பரிந்துரைக்கபட்டு 4ஆஸ்கார் அவார்ட்ஸ்-ஐ(சிறந்த நடிகை - Jennifer Connelly, சிறந்த இயக்குனர் - Ron Howard, சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை - Akiva Goldsman) அள்ளியது. IMDB டாப் 250-யில் 205-வது  இடத்தையும் பிடித்துள்ளது.


பல நல்ல படங்களை இயக்கியுள்ள Ron Howard சாதனையாளர் ஆஸ்கார் விருதுக்கு( இயக்கம் ) பரிந்துரைக்கபட்டவர். அதில் முக்கியமானவை the Andy Griffith show, American Graffiti,  Da Vinci code, Cinderella Man etc.. படத்தின் ஹைலைட் Russel crowe-வின் நடிப்பு என்று தான் சொல்லவேண்டும். அவருக்கு ஒரு ஆஸ்கார் கொடுத்திருக்கலாம்!!!!! ஒருவேளை அதற்கு முந்தின வருடம் வந்த (Gladiator) -காக அவர் ஆஸ்கார் வென்றதால் கொடுக்கவில்லையோ என்னவோ??? எப்படி Gladiator படத்தில் நடித்துவிட்டு அவரால் இந்த படத்தில் இப்படி ஒரு கெட்அப்  போட முடிந்ததோ தெரியவில்லை. பிரமிப்பாக உள்ளது!!!! படத்தின் நாயகி Jennifer Connelly மிக பிரபலமான நடிகை மட்டும் அல்ல, பல ஹிட் படங்களை தந்திருப்பவர். அதில் சில Requiem for a Dream (இந்தப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்), Blood diamond, Hulk etc.. 


படத்தின் கதை என்ன?  மனம் ஒரு அற்புதமான விஷயம். அது தான் நம் அனைவரின் மனிதத்தன்மை மற்றும் நமது தனித்துவ தனித்தன்மைக்கு முக்கிய காரணியாக இருக்கின்றது.அந்த மனமே  நமக்கு எதிராக செயல்பட்டால்? அல்லது பொய்யை உண்மை என நமக்கு நாமே நம்பசெய்தால்? இதைப்போன்ற ஒரு பிரச்சினையுடன் இருக்கும் ஒரு மனிதர், அதை சந்தித்து, வென்று எப்படி நோபல் பரிசு வென்றார் என்பது தான் கதை. ஜான் நாஷின் வாழ்க்கை சரித்திரம். அவர் வாழ்கையின் நடந்த சம்பவங்கள் மற்றும் அவர் எப்படி ஒரு கணித மேதையாக சாதித்தார் என்பதே ஆகும். மெலோ டிராமா என்று அழைக்கப்படும் மிக பொறுமையான திரைக்கதை. மெதுவாக நகரும் கதை என்பதால் சண்டை படம் மற்றும் விறுவிறுப்பான படம் பார்பவர்களுக்கு பிடிக்குமா என்பது சிறிது சந்தேகமே!!!. இருந்தாலும் தெளிந்த நீரோடை போல பயணிக்கும் இத்திரைப்படம் ரஸ்ஸல் க்ரோவின் நடிப்பு, அற்புதமான ஒளிப்பதிவு போன்றவற்றிற்காக கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்.


ஜான் ஒரு கணித மேதை, அவனுக்கு வாழ்க்கையில் உள்ள அனைத்து சம்பவங்களையும் எண்கள் மூலம் மட்டுமே பார்க்கத்தெரியும், அனைத்தையும் கணித சமன்பாடுகள் மூலம் சமன் செய்வது தான் அவனின் பொழுதுப்போக்கு. Princeton University யில் படிக்கும் ஜான், இறுதி ஆண்டில் முடிக்க வேண்டிய அசைன்மென்ட்-காக புதிதாக ஏதேனும் கண்டுடிபிக்க முயற்சிக்கிறான். அவனின் அறையில் ஒன்றாக தங்கி இருக்கும் சார்லஸ் என்பவன் அவனுடைய நண்பனாகிறான். தற்செயலாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்  போது Governing Dynamics என்ற தலைப்பில் ஒரு புதிய கான்செப்ட்-ஐ கண்டுப்பிடித்து வெளியிடுகிறான். அதன் விளைவாக அவனுக்கு MIT ( Massachusetts Institute Of Tech) யில் ஒரு வேலை கிடைகிறது. அங்கே மாணவியாக படிக்கும் அலிஷியா என்பவளுடன் காதல் மலர்கிறது.


சில ஆண்டுகளுக்கு பிறகு, பார்ச்சர் என்ற அதிகாரி பெண்டகன் (Pentagon)-யில் இருந்து ஜானை அழைத்து, தொலை தொடர்பு கம்பிகளில் உள்ள கோடு (Codes) ஐ உடைத்து ,  அதில் வரும் ரகசியங்களை மறையாக்குதல்(Encrypt) செய்து தருமாறு கூறுகிறார். சில நொடிகளில் கோடை(Codes) உடைக்கும்  ஜானுக்கு இந்த வேலை மிகவும் பிடித்து போக தன் முழு நேரத்தையும் இதில் செலவிடுகிறான். சில நாட்களுக்கு பின்னர் தன் நண்பனான சார்லஸ் மற்றும் அவனின் தங்கை மகளான மார்சி என்னும் சிறு பெண்ணை சந்திக்கிறான். அவனிடம் தான் அலிஷியாவை திருமணம் செய்யபோவதாக கூறுகிறான். அதன் பின்னர் திருமணமும் செய்துக்கொள்கிறான்.


ஒரு நாள் இரவில் ரகசிய கோடுகளை என்க்ரிப்ட் செய்து அதை போஸ்ட் பாக்ஸ்-ல் போட வரும் போது, சோவித் எதிரிகள் தாக்குகின்றனர். அவர்களை துப்பாகியால் சுட்டு ஜானை காப்பாற்றுகிறான் பார்ச்சர். பயந்து போகும் ஜான் தனக்கு இந்த வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு வீட்டிற்கு  திரும்புகிறான்.  மறு நாள் ஒரு கல்லூரியில் லெக்சர் கொடுதுக்கொண்டிருக்கும்போது  சில சோவித் ஆட்கள் ரோசென் தலைமையில் ,ஜானை தாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்ப்பிஒடுகிறான் ஜான். ரோசென் அவனிடம் இருந்து ரகசியங்களை தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறான் என்றும் நம்புகிறான்.


ஆனால் உண்மையில் ரோசென் என்பவர் ஒரு மனநிலை மருத்துவர். அவர் அலிஷியாவிடம் ஜான் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான் என்றும் அவன் சில உருவங்களை மனதில் கற்பனை செய்துக்கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறான் என்றும் சொல்கிறார். அதிர்ந்து போகும் அலிஷியா ஜானுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?  ஜான் எத்தனை மனிதர்களை கற்பனை செய்துகொண்டு இருந்தான்? அவன் குணமானானா? ஒரு மனநிலை பாதிக்கபட்டவன் எப்படி ஒரு பெரிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆனார்? இதற்கான விடைகளை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள். 

முதல் காட்சியில் சில நண்பர்கள்  ஜானை  செஸ்  விளையாட  அழைப்பார்கள், ஆட்டத்தில்  முதல் காயை  ஜான்  நகர்த்துவான். ஆனால்  அந்த  ஆட்டத்தில்  அவன்  தோற்றுவிடுவான். முடிவில் , இந்த  ஆட்டம் நேர்மையானது இல்லை, ஏமாற்றி விளையாடப்பட்டது என்றும்  , ஆட்டத்தின்  தொடக்கத்தில்  முதல் காயை  தான்  தான்  நகர்த்தியதாகவும்  அப்படி இருக்க   தான்  ஜெயித்திருக்க  வேண்டும்  என்று  சொல்வான் . இந்த சம்பவமே அவன் “Game Theory” எனும் புதிய படைப்பிற்கு  காரணமாக அமையும்.



ஜான் குணமடைந்து  விட்டதாக நம்பி குழந்தையை குளிக்கவைக்க சொல்வாள் அலிஷியா. குழந்தையை பாத் டப்பில் உட்காரவைத்துவிட்டு  கற்பனை  நண்பனை  குளிக்க வைக்க சொல்லிவிட்டு வேறு வேலை செய்துக்கொண்டிருப்பான் ஜான். பாத் டப்பில் தண்ணீர் நிரம்பிகொண்டிருக்கும். குழந்தை மூழ்கும் நிலையில் அலிஷியா குழந்தையை காப்பாற்றுவாள். மிக இயல்பாக இருக்கும் இந்த காட்சியை எப்படி கை குழந்தையை வைத்து இயக்கினார்களோ. பார்கவே நெஞ்சம் படபடத்தது.


ஜான் கல்லூரியில் படிக்கும் பொது ஒரு சமயம் நூலகத்தில்  ஒரு வயதான பேராசிரியர் புத்தகம் படித்து கொண்டிருப்பார். அப்பொழுது மற்ற பேராசிரியர்கள் தங்கள் சட்டை பையில் உள்ள பேனாவை எடுத்து அவர் அமர்ந்திருக்கும் டேபிள் மேல் வைப்பார்கள். எதற்கு என்று புரியாத ஜான் அதை பற்றி கேட்கும் பொது, அந்த பேராசிரியர் செய்த சாதனைக்காக என்பது தெரியவரும். படத்தின் இறுதி காட்சியில் ஜானின் டேபிள் மற்ற பேராசிரியர்களின் பேனாவால் நிறைந்திருக்கும். இதயத்தை வருடும் இந்த அற்புத காட்சி.


கதையில் வரும் ஜான் கற்பனை செய்துக்கொள்ளும் மனிதர்களை பார்க்கவும் முடியும், பழகவும் முடியும். ஆனால் நிஜ ஜான் கற்பனை செய்த மனிதர்கள் பேசுவதை மட்டுமே கேட்பாரே தவிர அவர்களை விசுவலாக(Visual) கற்பனை செய்யவில்லையாம்.


படத்தின் ஒளிப்பதிவு மிக அருமை. ஒரு அழகான கவிதை போன்ற இந்த திரைப்படத்தை நீங்க மிஸ் பண்ணாம  பாருங்க. Russel Crowe -வின் நடிப்புக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.இந்தப்படம் நமது மனதையும் , உணர்வையும் அப்படியே ஆக்கிரமித்துவிடும்.