Tuesday, 28 August 2012

One Flew Over the Cuckoo's Nest – திரைவிமர்சனம்


One Flew Over the Cuckoo's Nest - நல்ல தரமான படங்களை பார்த்து ரசிக்கும் ஒவ்வொருவரின் டாப் டென் லிஸ்ட்-ல் இந்த திரைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றே தீரும். ஆஸ்கரின் கிரான்ட் ஸ்லாம்(Grand Slam) விருதுகள் என்று அழைக்கப்படும் (சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த கதாசிரியர்) என ஆஸ்கர் விருதுகளை வென்றது. இதற்கு முன் இப்படி வென்ற படம் (It  Happened One  Night  - 1934 ) பிறகு (The Silence of the Lambs -1991 )-ல் வென்றது.


1962 -ல் Ken Kesey என்பவர் எழுதிய One Flew Over the Cuckoo's Nest என்ற நாவலை தழுவி தான் இந்தப்படம் எடுக்கப்பட்டது. மிலோஸ் போர்மன்(Milos Forman) இயக்கத்தில், ஜாக் நிக்கல்சன்  (Jack Nicholson) மெக் மர்பி(Mc Murphy)-ஆகவும், Louis Fletcher நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட்(Mildred Ratched)-ஆகவும், Will Sampson சீப் ப்ரோம்டேன் (Chief Bromden) –ஆகவும், Brad Douri பில்லி பாப்பிட் (Billy Babbit)–ஆகவும் நடித்துள்ளனர்.

Jack Nicholson - இந்தப்படத்தில் இவரது நடிப்பை பற்றி என்ன சொல்வது? தனது அட்டகாசமான நடிப்பால் தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றார், இப்படத்தில் மெக் மர்பியாகவே வாழ்ந்து இருப்பார். கோபம், வீரம், எள்ளி நகையாடுதல் போன்று நடிப்பில் உள்ள அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தி இருப்பார். இவரைப்போன்ற ஒரு நடிகன் மிக அரிதாகத்தான் தோன்றுவான்.


சிறிய அளவிலான குற்றங்களை செய்ததற்காக கைது செய்யப்படும் மெக் மர்பி, சிறைச்சாலையில் தனக்கு வழங்கப்படும் கடுமையான வேலைகளுக்கு பயந்து மன நலம் பாதிக்கப்பட்டவன் போல நடிக்கிறான். அவனது நடிப்பு சேட்டைகளை பார்த்து சிறைச்சாலை அதிகாரிகள் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருப்பானோ? என்று நினைக்கிறார்கள். அவன் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவனா? என்பதை கண்டறிய (Oregon)ஒரேகான்-ல் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்கு 90 நாட்கள் ஆய்விற்கு அனுப்புகின்றார்கள். மனநல மருத்துவமனைக்கு வரும் மெக் மர்பி தனக்கு வழங்கப்பட்ட 90 நாட்கள் சிறைத்தண்டனையை, சிறைச்சாலைக்கு சென்றால் கடுமையான வேலைகள் வழங்குவார்கள், அதனால் மனநல மருத்துவமனையிலயே ஜாலியாக கழித்துவிடலாம்  என்று எண்ணி அங்கு வருகிறான். அங்கு நடக்கும் சம்பவங்கள் தான் படம்.


ஜாலியாக பொழுதைக்கழிக்கலாம் என்று மனநல மருத்துவுமனைக்கு வரும் மெக் மர்பிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துகொண்டு இருக்கிறது. நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட் தான் மெக் மர்பி சிகிச்சைக்காக தங்கி இருக்கும் வார்டின் பொறுப்பாளர். அவள் வைத்தது தான் அங்கு சட்டம். அவளிடம் கருணை நானோ(Nano)அளவிற்கு கூட கிடையாது. 18 நபர்கள் தங்கி இருக்கும் அந்த வார்டில் சிலர், சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சிலர் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள், இவர்கள் அனைவரும் நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட் சொல்வதை அப்படியே பயந்து போய் செய்பவர்கள், ஆனால் மெக் மர்பி நர்ஸ் சொல்வதற்கு அப்படியே நேர் எதிராக செய்கிறான். இதனால் நர்ஸ்க்கு அவனை பிடிக்காமல் போகின்றது.

நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட் அந்த வார்டில் உள்ள அனைவரையும் சிகிச்சை என்ற பெயரில் பயமுறுத்தி, வெளியுலக தொடர்பு இல்லாமல் அவர்களை வார்டுக்கு உள்ளயே வைத்து இருக்கிறாள். யாரும் அவளுக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட பேசமாட்டார்கள், மீறினால் ஷாக் ட்ரீட்மென்ட் அல்லது மயக்கத்திலயே வைத்திருக்கும் மாத்திரைகள் கொடுத்துவிடுவாள். அப்படி ஒரு டெர்ரர் கேரக்ட்டர் தான் நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட்.


திக்கு வாய் உள்ள பில்லி பாப்பிட், 65வயதை தாண்டினாலும் குழந்தைப்போல் அடம்பிடிக்கும் சார்லி செஸ்விக், வாய் பேசாத மற்றும் காது கேளாதவன் என்று சொல்லப்படும் 7அடி உயரமுள்ள சீப் ப்ரோம்டன் போன்றவர்களுடன் நட்பாகிறான் மெக் மர்பி. சில நாட்களில் ப்ரோம்டனும் மெக் மர்பியும் நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள். தனியாகவே இருக்கும் ப்ரோம்டனுக்கு மெக் மர்பியை மிகவும் பிடித்துப்போகிறது. அந்த வார்டில் உள்ளவர்களுடன் சீட்டு விளையாடி, தான் வென்றால் தோற்றவர்களின் சிகரட்டுகளை எடுத்துக்கொள்வான் மெக் மர்பி இது தான் அவனது பொழுதுப்போக்கு.

   
கொஞ்சம் கொஞ்சமாக வார்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறான் மெக் மர்பி, அவர்களை தனது பேச்சு, சேஷ்டைகள் மூலம் சந்தோஷப்படுத்துகிறான். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று அடிக்கடி சொல்லி அவர்களை சிந்திக்க விடாமல் செய்கிறாள் நர்ஸ் ரேட்சட். அப்படி இல்லை நீங்களும் சாலையில் நடமாடும் சக மனிதர்களை போல் ஒருவர் தான் என்று அவர்களிடம் சொல்லி உற்சாகப் படுத்துகிறான் மெக் மர்பி.


ஒரு நாள் மருத்துவமனைக்கு சொந்தமான பேருந்தில் வார்டில் உள்ளவர்களை ஏற்றிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் மீன் பிடிக்கச்செல்கிறான், உடன் உள்ளவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல அஞ்சுகிறார்கள், நீங்கள் மன நோயாளிகள் இல்லை மீனவர்கள் என்று அவர்களிடம் சொல்லி உற்சாகப்படுத்தி மீன் பிடிக்க வைக்கிறான் மெக் மர்பி. அவர்களும் நிறைய மீன்களை  பிடிக்கிறார்கள். இதனால் மனநல காப்பகத்தில் உள்ள மருத்துவர்களால் கடுமையாக கண்டிக்கப்படுகிறான், எப்பொழுதும் போல அதைப்பற்றி கவலைப்படவில்லை  மெக் மர்பி.


உணவு அருந்தும் நேரம் மற்றும் தூங்கும் நேரத்தை தவிர வார்டில் உள்ளவர்கள், மற்ற நேரத்தில் என்ன செய்யவேண்டும்? என ஒரு அட்டவணை வைத்திருப்பாள் நர்ஸ் மில்ட்ரெட் ரேட்சட், அதில் ஒன்று, ஒவ்வொரு நாளும் வார்டில் உள்ள அனைவரையும் ஒன்றாகக்கூட்டி அவர்களிடம் பேசுவாள். அவர்களது கருத்துகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாள், யாரவது மாற்றுக்கருத்து சொன்னால் தனது கோபத்தையும், திமிரையும் முகத்தில் சிறு துளி கூடக் காட்டாமல், இவை அனைத்தையும் தன் குரல் மூலமாகவே வெளிப்படுத்தி, தனது கருத்துக்களை அவர்களிடம் திணித்து விடுவாள். மற்றவர்களை சுதந்திரமாக பேசவிடவே மாட்டாள். இது போன்ற மனரீதியான அடக்குமுறையால் மனநோயாளிகள் ஒருபோதும் குணமடைய மாட்டார்கள் என்று நினைக்கிறான் மெக் மர்பி.

   
இது போல ஒரு நாள் நர்ஸ் அனைவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, சார்லி செஸ்விக் தனக்கு சிகரட் வேண்டும் என கேட்கிறார், ஏனென்றால் நர்ஸ் ரேட்சட் அனைவரின் சிகரட்டுகளையும் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு, ஒரு நாளைக்கு சில சிகரட்டுகளை மாத்திரம் தருவாள். இதனால் சார்லி செச்விக்குக்கு சிகரட் தர மறுக்கிறாள், கோபமடையும் செஸ்விக் சிறு குழந்தையை போல அடம் பிடிக்கிறார், இதைக்கண்ட மெக் மர்பி நர்ஸ் ரேட்சட்-ன் அறையை உடைத்து சிகரட்டை எடுத்து வந்து தருகிறான், தடுக்க வந்த காவலர்களுடன் சண்டை போடுகிறான், அவனுக்கு துணையாக சீப் ப்ரோம்டன் வந்து சண்டை இடுகிறான். இருந்தும் காவலர்கள் அவர்கள் இருவரையும் பிடித்துக்கட்டி விடுகிறார்கள்.

  
அவர்கள் இருவரையும் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அறைக்கு அழைத்து செல்லுமாறு காவலர்களுக்கு கட்டளை இடுகிறாள் நர்ஸ் ரேட்சட். அறைக்கு வெளியே இருக்கும் போது சீப் ப்ரோம்டேனுக்கு சூவிங் கம் ஒன்றை கொடுக்கிறான் மெக் மர்பி, அதற்கு "நன்றி என கூறுகிறான் சீப் ப்ரோம்டன், அப்போது தான் அவனுக்கு பேசத்தெரியும் என்று தெரிகிறது. இருவரும் சிரித்துக்கொண்டே ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அறைக்கு செல்கிறார்கள். ஷாக் ட்ரீட்மென்ட் முடிந்து இருவரும் வார்டுக்கு திரும்புகிறார்கள் இருவரும். 90 நாட்களுக்கு பிறகு கூட தன்னை விடுதலை செய்ய மாட்டார்கள், எதாவது சொல்லி தன்னை இங்கயே வைத்து விடுவார்கள் என்று நினைத்து, அங்கிருந்து தப்பி செல்ல திட்டம் தீட்டுகிறான் உடன் வருமாறு ப்ரோம்டேனையும் அழைக்கிறான் மெக் மர்பி.

  
மனநல மருத்துவமனயில் இருந்து மெக் மர்பி தப்பிச்சென்றானா? உடன் சீப் ப்ரோம்டன் வந்தானா? இல்லை நர்ஸ் ரேட்சட்-ன் மனிதாபிமானம் அற்ற அதிகாரத்தை அங்கேயே இருந்து அடக்கினானா? நர்ஸ் ரேட்சட் என்ன ஆனாள்? மனநோயாளிகளுக்கு என்ன நேர்ந்தது? என்பதை மனதை விட்டு நீங்காத இந்தப்படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

“Cinema should make you forget you are sitting in a theatre” இதை சொன்னது புகழ் பெற்ற இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி, இவரது கருத்துக்கு இந்தப்படம் மிகச்சரியான சான்று. நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல், நாமும் அந்த மனநிலை மருத்துவமனையில் இருப்பது போல உணர்வு வந்துவிடும். அந்த கதாப்பாத்திரங்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்க தொடங்கி விடுவோம். அதனால் தான் இந்தப்படம் காலத்தால் அழியாமல் இன்றும் இருக்கிறது.

  
இந்தப்படம் நமது சமூகத்தை, மனநிலை மருத்துவமனையாக உருவகப்படுத்துகிறது. அந்த சமூகத்தில் வாழும் நாம் அதிகாரம் உள்ளவர்களால் அடக்கப்பட்டு அடங்கி போகும், மனநோயாளிகளை உருவகப்படுத்துகிறது. மெக் மர்பி போன்ற போராளிகள் அதிகார அடக்குமுறைக்கு எதிராக போரிட்டு மறையும் போது தனி மனித சுதந்திரம் எனும் மலரின் சில இதழ்களை இழக்கிறோம் அல்லவா?. இது போல் குறியீடுகளால் நிறைந்துள்ளது இந்தப்படம்.

இந்தப்படத்தின் இசை மிக மிக அற்புதம். அதுவும் கடைசி 10 நிமிடங்கள் வரும் பின்னணி இசை அப்பப்பா
... நம் மனதை எதோ செய்து விடும். கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு மிக அருமை. நர்ஸ் ரேட்சட் ஆக நடித்த லூயிஸ் பிளட்சர் நடிப்பு அபாரம்.


இந்தப்படத்தில் இருந்து நிறைய சீன்களை நமது தமிழ் இயக்குனர்கள் சுட்டு இருப்பார்கள்.
மௌன ராகம்படத்தில் கார்த்திக் போலீசில் அடிப்பட்டு சிரித்துகொண்டே வரும் காட்சி இதில் இருந்து சுட்டது தான்.
நம்ம இயக்குனர்கள் சீன் மட்டுமா சுடுவாங்க?
பிரபு நடித்த மனசுக்குள் மத்தாப்பு இந்தப்படத்தை சுட்டு எடுத்தது தான்.
ஸ்வீடனில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப்படம் 1976-1987 வரை தொடர்ந்து 11வருடங்கள் ஓடியது.

மிஸ் பண்ணாம பாருங்க
, உங்கள் மனதில் நீங்காத இடம் பெரும் இத்திரைப்படம்.

36 comments:

 1. படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.மிக்க நன்றி ! தமிழில் டப்செய்து வெளியிட்டு விட்டார்களா?நமக்கு ஆங்கிலம் அவ்வளவாக புரியாது.சிரம்மம் பார்க்காமல் பதிவிட்டதிர்கு நன்றி !

  ReplyDelete
  Replies
  1. தமிழ்ல டாப் பண்ணலைன்னு தான் நினைகிறேன்... Subtitles download செய்து பார்த்தால் சற்று எளிதாக இருக்கும்..

   Delete
 2. மெயில் மூலம் படிக்கும் வசதி ஏற்படுத்தினால் உபயோகமாக இருக்கும்.செய்த பின் தெரிவிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. வருக்கைக்கு மிக்க நன்றி நண்பரே.. நிச்சயமாக தெரியபடுத்துகிறேன்..

   Delete
 3. செமயா எழுதியிருக்கீங்க டாக்கீஸ். நல்ல படங்களா அறிமுகப்படுத்திறீங்க.

  ஷைனிங் படத்தில் ஜாக் நடிப்பில் மிரட்டியிருப்பார். அதைப் பார்த்தவுடனேயே இந்தப் படத்தையும் டவுன்லோட் பண்ணி வைத்துவிட்டேன். இன்னும் பார்க்க நேரம் வாய்க்கவில்லை. சீக்கிரம் பார்க்கணும். :-)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா..
   சீக்கிரம் பாருங்க... ரொம்ப பிடிக்கும்...

   Delete
 4. விரிவான பதிவு.. அருமை..

  ReplyDelete
 5. மிக்க நன்றி நண்பா..

  ReplyDelete
 6. நிச்சியம் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்தது இந்த விமர்சனம். அருமை..

  இந்த படங்களை பார்க்கவும்

  1. The Great Debaters
  2. The Kite Runner
  3. Changeling

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரகு..
   நிச்சயம் படங்களை பார்கிறேன்...
   தொடர்ந்து வாசியுங்கள்..

   Delete
 7. ஏது அஞ்சு ஆஸ்காரா? இப்போ டவுல் லோட் போட முடியாது ஏன்னா டேட்டா காலி! சில நாட்களிலேயே படம் பார்த்துவிடும் நம்பிக்கை உண்டு. படம் பிடிக்கும் என நினைக்கிறேன். என்னை போல சுபாவம் கொண்டவர்களது படம் என்கிறபடியால்!

  ReplyDelete
  Replies
  1. ஆமா 5 ஆஸ்கார் தான்...
   உங்களுக்கு கண்டிப்பா படம் பிடிக்கும்....

   Delete
 8. விரிவான, விளக்கமான விமர்சனம்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே

   Delete
 9. படத்தின் கதையும் தாங்கள் அதைச்
  சொல்லிச் சென்றவிதமும் அருமை
  நிச்சயம் இந்தப் படத்தை பார்த்துவிடுவேன்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...
   கண்டிப்பா படம் பாருங்கள்.. பிடிக்கும்

   Delete
 10. // ஸ்வீடனில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப்படம் 1976-1987 வரை தொடர்ந்து 11வருடங்கள் ஓடியது.//
  அடேங்கப்பா.. படம் அடிக்கடி நெறையப்பேர் சொல்லி, பார்க்கனும்னு நெனைச்சுக்கிட்டு விட்டு விட்டுப் போனது.
  இப்போ கதை கொஞ்சம் தெரிஞ்சதால முடிஞ்சளவு சீக்கிரம் பார்க்கனும் போலிருக்கு! விமர்சனத்துக்கு நன்றி..

  ReplyDelete
 11. நன்றி நண்பா...
  ஆமா நல்ல படம். கண்டிப்பா பாருங்க..

  ReplyDelete
 12. சில வருடங்களுக்கு முன் பார்த்த திரைப் படம்.
  உங்கள் விமர்சனம் மீண்டும் பார்க்கத் தூண்டிவிட்டது...

  ReplyDelete
 13. வருகைக்கு நன்றி நண்பா.....
  ஜாக் நடிப்புக்காகவே மீண்டும் பார்க்கலாம்..

  ReplyDelete
 14. shining படம் பார்த்ததில் இருந்து ஜாக் நிகல்சன் ரசிகன் ஆகிவிட்டேன். என்ன நண்பா உங்கள் படம் எல்லாமே classic படங்களாகவே உள்ளது.கொஞ்சம் அரிதான படங்கள் பற்றியும் எழுதுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா
   ப்ளாக் ஆரம்பித்து ஒரு மாத காலம் தான் ஆகிறது. கிளாச்சிக் படங்கள் முடித்த பின்பு நீங்கள் கூறுவது போல அரிதான படங்களை பற்றி நிச்சயம் எழுதுகிறேன்.

   Delete
 15. நண்பரே,
  ஏனோ இந்த படத்தை இத்தனை நாள் பார்க்காமல் இருந்தது விட்டேன்.கூடிய விரைவில் பார்கிறேன்.. நீங்கள் கதையை விவரிக்கும் ஸ்டைல் மிகவும் அருமை. முழு படத்தையும் பார்த்த உணர்வை தருகிறது. ரொம்ப நல்ல பதிவு.....
  நம்ம விஜய் சொல்லுற மாதிரி, நீங்க கிளாசிக் படங்களை முடிச்ச அப்புறம், அரிதான படங்களை பற்றியும் கொஞ்சம் எழுதுங்க...
  நீங்க Memento படத்தை பார்த்து இருந்தால் அதை பற்றி எழுதலாமே...எனக்கு மிகவும் பிடித்த படம்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா.
   கண்டிப்பா எழுதறேன்.
   Memento பாத்தாச்சு. கட்டாயம் எழுதறேன்..

   Delete
 16. Try to post review of English movie Unknown and Taken

  ReplyDelete
 17. Sure will write. Hope your Liam Neeson's Fan... :)

  ReplyDelete
 18. Appadi ellam illa... Chumma...

  ReplyDelete
 19. Review in English would help us better :) Thanks

  ReplyDelete
 20. ya..... nice movie. already i saw.

  ReplyDelete
 21. arumaiyana pathivu sir......nejama azha vaikira sila pangalla idhuvum onnu... P.S: Michael Doughlas.....indha padutha produce pannadhukku Oscar vaangiyirukkar...

  ReplyDelete
 22. உண்மை தான் நண்பா.. மிக அற்புதமான படம்..

  ReplyDelete
 23. நல்ல திரைபடத்தின் சிறந்த விமர்சனம், ஜாக் நிகால்சனின் சிறந்த நடிப்பில் வந்த இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் சகிக்காமல் பார்க்கலாம்.

  ReplyDelete